மலேசியா ஏர்லைன்சு விமானம் 239 பேருடன் காணாமல் போனது, தேடும் பணிகள் தீவிரம்

சனி, மார்ச்சு 8, 2014

கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கு நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்சு விமானம் ஒன்று காணாமல் போனதை அடுத்து மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


போயிங் 777-200ஈஆர் விமானம் (கோப்புப் படிமம்)

எம்எச்370 என்ற இவ்விமான சேவையின் போயிங் 777-200ஈஆர் விமானம் தமது ராடார் கருவிகளில் இருந்து காணாமல் போனதாக கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் உள்ளூர் நேரம் 02:40 மணிக்கு தொடர்புகள் அனைத்தையும் இழந்து விட்டதாக விமான நிறுவன அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இவ்விமானம் பெய்ஜிங்கை காலை 06:30 மணிக்கு அடைவதாக இருந்தது.


இவ்விமானத்தில் பயணித்தவர்களில் 153 பேர் சீனர்கள், 38 பேர் மலேசியர்கள், 12 பேர் இந்தோனேசியர்கள், 6 ஆத்திரேலியர்கள், 5 இந்தியர்கள், 4 அமெரிக்கர்கள் மற்றும் பிரான்ஸ் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த சிலரும், 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இரண்டு பாலகர்களும் இதில் பயணித்திருந்தனர்.


பயணிகளின் குடும்பத்தினருக்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசியா ஏர்லைன்சு நிறுவன அதிகாரி தெரிவித்தார்.


வியட்நாமின் தெற்கே இவ்விமானம் தமது இராடார் கருவிகளில் இருந்து மறைந்து விட்டதாக வியட்நாமிய அரசு இணையதளம் ஒன்று தெரிவிக்கிறது. கடைசியாக வியட்நாமின் கா மாவு தீபகற்பத்தில் இது காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்சீனக் கடலின் கிழக்குக் கரையில் தேடுவதற்கென விமானம் ஒன்றும், இரண்டு உலங்கு வானூர்திகளும் நான்கு கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது. இவற்றை விட வியட்நாம், பிலிப்பீன்சு, சீனா ஆகிய நாடுகளும் தமது நாட்டுக் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளன.


விமான ஓட்டி 53 வயதான கப்டன் சகாரி அகமது ஷா 1981 ஆம் ஆண்டில் மலேசியா ஏர்லைன்சில் இணைந்தவர்.


மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் ஆசியாவின் மிகப் பெரும் விமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் நாள்தோறும் சுமார் 37,000 பயணிகளை சுமார் 80 இடங்களுக்கு ஏற்றிச் செல்கிறது. போயிங் 777-200ஈஆர் ரக விமானங்கள் எதுவும் அதன் 20 ஆண்டு கால வரலாற்றில் இவ்வளவு மோசமான விபத்தை சந்தித்ததில்லை எனக் கூறப்படுகிறது. 2013 ஜூலையில் கொரிய விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரையில் மோதி வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.


மூலம் தொகு