மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
ஞாயிறு, சூலை 20, 2014
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு
- 20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
இரண்டு நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 இல் பயணம் செய்த 298 பேரில் 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைனிய நிவாரணப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டோரெசு என்னும் நகரில் குளிரூட்டப்பட்ட தொடருந்து வண்டியொன்றில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழன் அன்று 298 பேருடன் சென்ற எம்எச்17 என்ற விமானம் ஏவுகணை ஒன்றினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய விமானம் வீழ்ந்த இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயன்று வருவதாக உக்ரைனிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. உருசியாவின் ஆதரவிலேயே கிளர்ச்சியாளர்கள் செயல்படுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் கிளர்ச்சியாளர்கள் தமக்கு விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவதற்கு முழுமையான அனுமதியை வழங்கவில்லை என விமானத்தின் சிதைவுகளை ஆராய்வதற்கெனச் சென்ற ஐரோப்பியக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் விமானத்தில் பயணம் செய்த பயணிகளதும், பணியாளர்களினது விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன் படி, விமானத்தில் 193 நெதர்லாந்து நாட்டவரும் (இவர்களில் ஒருவர் அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர்) 43 மலேசியர்கள் (15 பணியாளர் உட்பட), 27 ஆத்திரேலியர்கள், 12 இந்தோனேசியர்கள், 10 பிரித்தானியர் (ஒருவர் தென்னாப்பிரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர்), நான்கு செருமனியர், நான்கு பெல்ஜியம் நாட்டவர், மூன்று பிலிப்பீனியர், மற்றும் கனடா, நியூசிலாந்து நாட்டவர்கள் ஒவ்வொருவர் பயணித்துள்ளனர்.
ஆத்திரேலியாவில் நடைபெறும் எயிட்சு பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்குபற்றவெனப் புறப்பட்ட சில ஆய்வாளர்களும் விபத்தில் இறந்துள்ளனர்.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் சண்டை தொடர்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்
தொகு- MH17 air crash: 196 bodies found, பிபிசி, சூலை 20, 2014
- MH17 crash site: Freelance journalist Filip Warwick reveals grim first views, சிட்னி மோர்னிங் எரால்டு, சூலை 19, 2014