மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு

வெள்ளி, செப்டம்பர் 4, 2009, பினாங்கு, மலேசியா:

மலேசியாவில் பினாங்கு தீவு


மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.


அங்குள்ள வீடுகளை தகர்க்கும் பணியை மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ தொடங்கியது. வீடுகளை இடித்துத் தள்ளுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த தகர்ப்புக் குழுவினர் போலிசாரின் உதவியுடன் நேற்று அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்.


வீடுகளை இடிப்பதற்கு ஏற்கனவே சம்மதித்த சில குடியிருப்பாளர்களின் வீடுகளை ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர்.


மூன்று வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அப்பணியைத் தொடர விடாமல் தடுத்தனர். கிராம மக்களுக்கு ஆதரவாக மஇகா இளையர் பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் இறங்கினர். மஇகா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கிராம மக்கள், வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க முயன்றனர். தகர்ப்பு இயந்திரங்களையும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.


இதனால் குடியிருப்பாளர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக என்எஸ்டி தகவல் கூறியது. அப்போது நிகழ்ந்த சலசலப்பில் 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.


கம்போங் புவா பாலா கிராமப் பிரச்சினை பல மாதங்களாக நீடிக்கிறது. அங்குள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் குடியிருப்பாளர்கள் அதற்கு மறுத்து வருகின்றனர்.


அந்த இடத்தை பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மேம்பாட்டு நிறுவனம் அங்கு கண்டோமினிய வீடுகளைக் கட்டவுள்ளது. குடியிருப்பாளர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும் குடியிருப்பாளர்கள் அதற்கு இணங்கவில்லை. கிராம மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் முடிவடைந்தது.

மூலம்

தொகு