கொரிய போயிங் விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரையில் மோதி வெடித்தது, இருவர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூலை 7, 2013

தென் கொரியாவில் இருந்து சென்ற போயிங் 777 ரக பயணைகள் விமானம் ஒன்று சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய போது வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இவ்விபத்திற்கு விமானத்தின் தொழிநுட்பக் கோளாறு காரணமல்ல என ஆசியானா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஆசியானா விமான நிறுவனத்தின் போயிங் 777-200ஈஆர்

விமானத்தில் பயணம் செய்த 307 பேரில் பெரும்பாலானோர் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக வெளியேறி விட்டனர், ஆனாலும் 49 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் ஐவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் மொத்தம் 291 பயணிகளும், 16 பணியாளர்களும் பயணம் செய்தனர். பயணிகளில் 141 சீனர், 77 கொரியர்கள், 61 அமெரிக்கர் ஆகியோர் விமானத்தில் இருந்தனர்.


விமான ஓடுபாதையில் விமானம் தரையிறங்கவில்லை என்றும், சிறிது தள்ளியே அது தரையைத் தொட்டது எனவும் இதனால் இதன் வால் பகுதி இரண்டு துண்டுகளாகப் பிளவடைந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது. விமானம் தரையிறங்கும் போது எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தப்பியவர்களில் ஒருவர் தெரிவித்தார்.


இவ்விபத்திற்கு விமான ஓட்டிகளின் தவறு இருந்திருக்கலாம் எனத் தெரிவித்த ஆசியானா நிறுவனத் தலைவர் யூன் யங்-டூ, ஆனாலும், விமானிகள் அனைவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் எனத் தெரிவித்தார்.


விமானத்தின் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரண்டு சீனப் பெண்கள் கொல்லப்பட்டனர். போயிங் 777 ரக விமான விபத்து ஒன்றில் இறந்த முதல் நபர்கள் இவர்களே எனக் கூறப்படுகிறது. இரட்டை-எந்திரங்களைக் கொண்ட இவ்வகை விமானங்கள் பொதுவாக மிகவும் பாதுகாப்பானவை எனப் பெயர் பெற்றிருந்தது. பல விமான நிறுவனங்கள் இவற்றைத் தமது சேவைகளில் பயன்படுத்தி வருகின்றன.


மூலம்

தொகு