மத நிந்தனை செய்வோருக்கு எதிராக வங்காளதேச முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, ஏப்பிரல் 6, 2013

இசுலாமைத் தாக்கி எழுதும் வலைப்பதிவர்களுக்கு மரண தண்டனை உட்படக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் வங்காளதேசத்தில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.


மத நிந்தனைக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும் எனக் கோரி இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டார். தலைநகர் டாக்காவின் தென்மேற்கே உள்ள பங்கா நகரில் அவாமி லீக், எஃபசாட்-இ-இசுலாமி கட்சி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் அவாமி லீக் கட்சியின் உள்ளூர் தலைவர் நௌசர் கான் என்பவர் கொல்லப்பட்டார்.


"நீண்ட ஊர்வலம்" என அழைக்கப்பட்ட இந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு தூர இடங்களில் இருந்தும் கிராம மக்கள் வந்து கூடினர். பழமைவாத மதக் கட்சிகளுக்கெதிராக அண்மைக்காலங்களில் வலைப்பதிவுகள் எழுதப்பட்டதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஜமாத்-இ-இசுலாமி கட்சியின் ஆதரவுடன் இயங்கும் எஃபசாத்-இ-இசுலாம் என்ற இசுலாமியக் குழு இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.


இந்த ஆர்ப்பாட்டத்தைக் குலைப்பதற்காக முன்னதாக மதச்சார்பற்றவர்கள் நாடு முழுவதிலும் 22-மணி நேர வேலைநிறுத்தத்தைக் கோரியிருந்தனர். இதனால் தலைநகர் டாக்காவில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.


1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு மரணதனடனை விதிக்க வேண்டும் என வலைப்பதிவர்கள் பலர் கோரியிருந்தனர். இவ்வலைப்பதிவர்களில் ஒருவரான அகமது ரஜீப் ஐதர் என்பவர் கடந்த பெப்ரவரியில் அவரது வீட்டிற்கு வெளியே வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.


இவ்வார ஆரம்பத்தில் நான்கு வலைப்பதிவர்கள் இசுலாம் மதத்திற்கு எதிராகப் பரப்புரை செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாக ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும், இசுலாமியவாதிகளுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்று வருகிறது.


மூலம்

தொகு