மத்திய ஆசியாவில் நிலநடுக்கம், 13 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 21, 2011

கிர்கிஸ்தானில் மையம் கொண்டிருந்த 6.1 அளவு நிலநடுக்கத்தினால் அதன் எல்லையில் உள்ள உஸ்பெகிஸ்தானில் 13 பேர் கொல்லப்பட்டனர்.


ஃபெர்கானா நகரப் பகுதி காட்டப்பட்டுள்ளது

ஃபெர்கானா பள்ளத்தாக்கில் நேற்று புதன்கிழமை அதிகாலை 01:35 மணிக்கு இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தில் மேலும் 86 பேர் காயமடைந்ததாக உஸ்பெக் அரசு அறிவித்துள்ளது. கிர்கிஸ்தானில் இது வரை எவ்வித உயிர்ச் சேதமும் அறிவிக்கப்படவில்லை.


ஃபெர்கானா நகரின் தென்மேற்கே 42 கிமீ தொலைவில் 18 அடி ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.


"ஃபெர்கானா பகுதியில் சில பழைய கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த இடிபாடுகளிடையே சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்," என உஸ்பெக்கிஸ்தான் அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். இரவு முழுவதும் மக்கள் வெளி இடங்களிலேயே கழித்தனர்.


ஃபெர்கானா பள்ளத்தாக்கு மூன்று நாடுகளை, உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. இப்பகுதி மத்திய ஆசியாவில் மிகவும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசம் ஆகும்.


2008 ஆம் ஆண்டில் கிர்கிஸ்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 70 பேருக்கு மேல் உயிரிழந்தனர். 1966 ஆம் ஆண்டில் 7.5 அலவு நிலநடுக்கம் ஒன்று உஸ்பெக் தலைநகர் தாஷ்கெண்ட் நகரைத் தாக்கி அழித்தது.


மூலம்

தொகு