உஸ்பெக் மொழி விக்கிப்பீடியாவை உஸ்பெக்கித்தான் தடை செய்தது

சனி, பெப்பிரவரி 18, 2012

மத்திய ஆசியாவின் மிகவும் மக்களடர்த்தி கூடிய நாடான உஸ்பெக்கித்தான் தனது சொந்த மொழி விக்கிப்பீடியாவை இணையத்தில் பார்ப்பதற்குத் தடை விதித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


உஸ்பெக் விக்கிப்பீடியா சின்னம்

இணையத்தில் கடந்த சில வாரங்களாக உஸ்பெக் மொழி விக்கிப்பீடியாவைத் (uz.wikipedia.org) தேடி வருவோர் எம்எஸ்என்.கொம் இணையத்தளத்திற்கு வழிமாற்றுச் செய்யப்படுகிறர்கள். உஸ்பெக்கித்தானுக்கு வெளியே இந்தத் தடை இல்லை. வேறு மொழி விக்கிப்பீடியாக்களுக்கும் தடை எதுவும் இல்லை.


இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாக உறுதி கூறிய உஸ்பெக்கித்தான் தகவல் தொடர்பு அமைச்சகப் பேச்சாளர், தற்போது அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்து வருகிறார். உருசியத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உஸ்பெக் தூதரகமும் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டதாக ரியாநோவஸ்தி செய்தியாளர் தெரிவித்தார்.


நேற்று வெள்ளிக்கிழமை வரை உஸ்பெக் விக்கிப்பீடியாவில் மொத்தம் 7,876 கட்டுரைகள் உள்ளன. 30-மில்லியன் மக்கள்தொகை கொண்ட உஸ்பெக்கித்தானில் கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாக அரசுத் தகவல் தெரிவிக்கிறது.


முன்னரும் இரு தடவைகள், 2007, 2008 ஆம் ஆண்டுகளில், உஸ்பெக்கித்தான் தனது மொழி விக்கிப்பீடியாவைத் தடை செய்திருந்தது. உஸ்பெக்கித்தானில் மிகக் கடுமையான தணிக்கை அமுலில் உள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு உஸ்பெக்கித்தானை "இணையத்தின் எதிரிகள்" எனத் தனது 2011 அறிக்கையில் தெரிவித்திருந்தது.


மூலம்

தொகு