கராச்சி விமான நிலையத் தாக்குதலுக்கு உஸ்பெக்கிஸ்தான் இசுலாமிய இயக்கம் உரிமை கோரியது

புதன், சூன் 11, 2014

கடந்த ஞாயிறன்று கராச்சி ஜின்னா பன்னாட்டு விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உஸ்பெக்கித்தான் இசுலாமிய இயக்கம் உரிமை கோரியுள்ளது.


இராணுவ வான் தாக்குதல்களுக்குப் பழி வாங்க நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பங்கு பற்றிய தமது 10 போராளிகளின் படங்களை உஸ்பெக்கித்தானின் இசுலாமிய இயக்கம் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலில் அனைத்துப் 10 போராளிகள் உட்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர்.


துப்பாக்கிதாரிகளின் டிஎன்ஏ மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் இவர்கள் உஸ்பெக்கைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது. வடக்கு வரிசிஸ்தானின் பழங்குடிகளின் பிரதேசத்தில் இயங்கும் இவ்வியக்கத்தினர் கடும் பயிற்சி எடுத்த போராளிகள் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அல்-காயிதா மற்றும் தாலிபான்களுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர். 2012 பெசாவர் விமான நிலையத் தாக்குதலிலும் இவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.


ஞாயிற்றுக்கிழமைத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை கராச்சி விமான நிலையத்தின் அருகே அமைந்திருந்த பாதுகாப்புப் படையினரின் பயிற்சி முகாம் மீது துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இத்தாக்குதலில் எவரும் உயிர் துறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


செவ்வாய்க்கிழமை காலையில் வடமேற்கு கைபர் பிரதேசத்தில் பாக்கித்தானிய இராணுவம் வான் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 15 போராளிகள் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு