போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், சனவரி 14, 2014

கடந்த மூன்று ஆண்டு காலப் பகுதியில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தின் தாக்குதலுக்குள்ளானவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிட்டாத நிலையில் இந்தியா போலியோ அற்ற நாடாக உருப்பெறுகின்றது.


இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்குத் திட்டம்

இந்திய அரசினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வுகளின் பின்னர் பெப்ரவரி மாதத்திலேயே இந்த அறிக்கையை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1980 இல் அம்மை நோய் முற்றாக இந்தியாவில் இருந்து அழிக்கப்பட்டபின்னர் தற்போது இளம்பிள்ளை வாதமும் அழிக்கப்பட்டுள்ளது.


இறுதியாக போலியோ தாக்கத்திற்குள்ளான 18 வயதான பெண் ஒருவர் 2011ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அறியப்பட்டார். இதேவேளை 2009ம் ஆண்டு சுமார் 741 நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். இது உலகளவில் அறிவிக்கப்பட்ட போலியோ தாக்குதல் தொடர்பான நிகழ்வுகளின் சரி அரைவாசிப் பங்காகும். 1978ற்கும் 1995ற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 50,000 தொடக்கம் 100,000 வரையானனோர் பாதிப்புக்குள்ளானார்கள். இந்தியாவிலிருந்தே போலியோ உலகின் பல நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக அக்காலத்தில் பெரும் குற்றச்சாட்டுகளும் நிலவியது. இந்தியாவின் பொதுச் சுகாதாரத்துறையின் தொடர்ச்சியான வேலைத் திட்டங்களினால் இந்த மைல்கல் எட்டப்பட்டதாக கருதப்படுகின்றது.


இந்தப் போலியோ மருந்து வழங்கும் செயற்பாட்டில் சுமார் 23 லட்சம் தொண்டர்கள் ஈடுபட்டார்கள் என்பதையும், அவர்கள் சுமார் 170 மில்லியன் சிறுவர்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்தார்கள் என்பதையும் குறிப்பிடப்படவேண்டும்.


இந்தியாவின் சுகாதார அமைச்சர் குலாம் நாபி அசாட் அவர்கள் "போலியோ தாக்கத்திற்குள்ளான ஒரு நபர் கூட மூன்று வருடங்களில் அறிவிக்கப்படாமையானது இந்தியாவின் பெருமை மிக்க தருணம். இது பெரும் செயற்றிட்டங்களின் மூலம் கடுமையாக உழைத்து எட்டிய ஒரு பெரும் பாரிய மைல்கல்" என்று தெரிவித்தார்.


இதேவேளை சுகாதார நிறுவனங்கள் இந்த நோய் உலகில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட்டாலும் யுத்தம் நிலவும் நாடுகளில் மீளவும் தலைதூக்கும் நிலை காணப்படுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக சோமாலியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே போலியோ அழிக்கப்பட்டிருந்தாலும் தற்போது மீளவும் அங்கே போலியோ தாக்கியோர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே வேளையில் பாக்கிஸ்தானில் போலியோ தடுப்பு வேலை திட்டங்களை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆயுததாரிகள் மேற்கு நாடுகளின் ஒரு சதிவேலையே இந்த சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி என்று எண்டுவதே இதற்கான முக்கிய காரணமாகும். பாக்கிஸ்தான் இந்த வேலைத் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அல்லது மீளவும் இந்தியாவினுள் போலியோ பாக்கிஸ்தானில் இருந்து பரவும் சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போதய நிலை நீடித்தால் ஆப்கானித்தான் மற்றும் நைஜீரியாவில் 2014ல் போலியோ நோய் முற்றாக அழிந்துவிடும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது.


மூலம்

தொகு