உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், திசம்பர் 12, 2013

கஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய உலகின் முதலாவது நாடாக இலத்தீன் அமெரிக்க நாடான உருகுவே விளங்கவிருக்கிறது. இதன் மூலம் மரிஜுவானா என அழைக்கப்படும் இப்போதைப் பொருளை அந்நாட்டில் உற்பத்தி செய்யவோ, வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும்.


கஞ்சா செடி

உருகுவேயின் மேலவையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் இடம்பெற்ற 12 மணிநேர விவாதத்திற்கு பின் இச்சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக 16 பேரும் எதிராக 13 பேரும் வாக்களித்தனர். காங்கிரசின் கீழவை ஏற்கனவே இச்சட்டமூலத்தை கடந்த யூலை மாதத்தில் அங்கீகரித்திருந்தது.


அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இச்சட்டமூலத்தின் படி, பதிவு செய்த 18 வயதிற்கு மேற்பட்ட உருகுவே நாட்டவர் எவரும் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் (1.4 அவுன்சு) போதைப்பொருளை உரிமம் உள்ள மருந்தகம் ஒன்றில் கொள்வனவு செய்யமுடியும். அத்துடன் பதிவுசெய்த ஒவ்வொருவரும் தமது வீடுகளில் ஆண்டு ஒன்றுக்கு ஆகக்கூடியது ஆறு மரிஜுவானா செடிகள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.


"இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் அரசுகளும் இச்சட்டத்தை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்," என மேலவை உறுப்பினர் கொன்ஸ்டான்சா மொரெய்ரா கூறினார். இச்சட்டமூலம் இடதுசாரி அரசுத்தலைவர் ஒசே முகிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உலகப் போர் தோல்வியடைந்துள்ளது எனவும், போதைக் கடத்தல்காரர்களை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் உதவும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 78 வயதான ஒசே முகிக்கா இச்சட்டமூலத்திற்கு கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே இது சட்டமாக்கப்படும்.


இச்சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உருகுவே தலைநகர் மொண்டிவிடியோவில் உள்ள காங்கிரஸ் அவைக்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் கூடி ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும், நாட்டில் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்பின் படி, மூன்றில் இரண்டு பங்கினர் இச்சட்டமூலத்திற்கு எதிராகக் கருத்துக் கூறியுள்ளனர்.


மரிஜுவானா பயன்படுத்துவது உருகுவேயில் ஏற்கனவே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது ஆயினும் அதன் விற்பனை மற்றும் உற்பத்தி தடை செய்யப்பட்டிருந்தது. இப்புதிய சட்டத்தின் மூலம் அதிக மக்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயம் இருப்பதாக எதிர்ப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறுவர்கள் இதன் மூலம் போதைப்பொருளுக்கு அடிமையாகும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் அல்பிரடோ சோலாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், போதைப்பொருளைச் சட்டபூர்வமாக்கும் உருகுவேயின் முடிவை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. மரிஜுவானாவின் விற்பனை, உற்பத்தி ஆகியவற்றை சட்டபூர்வமாக்குவது பன்னாட்டு சட்டங்களுக்கு முரணானது எனத் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்டத்தைத் தெரிந்து கொண்டே முறிப்பது தமக்கு ஆச்சரியத்தைத் தருவதாகப் பன்னாட்டுப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ரேமண்ட் யான்ஸ் கூறியுள்ளார்.


மூலம்

தொகு