போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

வியாழன், திசம்பர் 13, 2012

1992-95 பொசுனியப் போரில் இனப்படுகொலை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொசுனிய-செர்பிய இராணுவ ஜெனரல் ஸ்த்ராவ்கோ தொலிமிர் என்பவருக்கு முன்னாள் யுகோசுலாவியாவுக்கான ஐநா பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஸ்த்ராவ்கோ தொலிமிர்
சிரெப்ரென்னிக்கா

64 வயதுடைய தொலிமிர் பொசுனிய செர்பிய இராணுவத்தில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைக்கு பதில் படைத்தலைவராக இருந்தவர்.


மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள், மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்கு இவரை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டுள்ளது. முசுலிம்களையும், குரோவாசியர்களையும் பொசுனியாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு இவர் ஆதரவாக இருந்தார் என்றும், இந்நடவடிக்கைகளில் இவர் மிகுந்த பற்றுடன் பங்கேற்றார் என்றும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


1995 சூலை மாதத்தில் சிரெப்ரெனிக்கா நகரம் செர்பியப் படைகளால் கைப்பற்றப்பட்டதை அடுத்து 8,000 முசுலிம் ஆண்கள், மற்றும் சிறுவர்களைப் படுகொலை செய்த நிகழ்வில் நேரடியாக தொலிமிர் சம்பந்தப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.


சிரெப்ரெனிக்காவிலும், சேப்பா நகரிலும் இடம்பெற்ற கொலைகள் பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டது என்றும் சாதாரண பொதுமக்களுக்கு எதிரானவையல்ல என்றும் தொலிமிர் வாதாடினார்.


த ஏக் நகரில் அமைந்துள்ள போர்க்குற்ற நீதிமன்றம் 2005 பெப்ரவரியில் தொலிமிர் குற்றவாளியாகக் கண்டது. இரண்டு ஆண்டுகள் தலைமறைவாயிருந்த தொலிமிர் 2007 மே மாதத்தில் பொசுனியா எர்செகோவினாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு உடனடியாகவே மேலதிக விசாரணைக்காக நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


பொசுனிய செர்பிய இராணுவத் தலைவர் மிலாதிச், மற்றும் அரசியல் தலைவர் ரதொவான் கராத்சிச் ஆகியோர் தற்போது போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு