பொனி எம் பாடகர் பொபி ஃபாரெல் 61வது அகவையில் காலமானார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, திசம்பர் 31, 2010

1970களில் புகழின் உச்சத்தில் இருந்த பொனி எம் என்ற ஆங்கிலப் பொப் இசைக் குழுவின் முக்கிய பாடகராகவும் நடனக்காரராகவும் இருந்த பொபி ஃபாரெல் தனது 61வது அகவையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.


பொபி ஃபாரெல்

உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் தனது விடுதி அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக அவரது முகவர் ஜோன் சைன் தெரிவித்தார். புதன்கிழமை நடைபெற்ற அவரது நிகழ்வுக்கு முன்னரும் பின்னரும் மூச்சுவிடச் சிரமமாயிருப்பதாக முறையிட்டிருந்ததாக முகவர் தெரிவித்தார்.


பாரெல் வெள்ளிக்கிழமை அன்று ரோம் நகரில் இடம்பெறவிருந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள இத்தாலி செல்லவிருந்தார்.


கரிபியன் தீவான அருபாவில் பிறந்த ஃபாரெல் 15வது அகவையில் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றச் சென்ரார். பின்னர் நோர்வேக்கும் செர்மனிக்கும் சென்று நடனக்காரர் ஆனார். 1974 ஆம் ஆண்டில் செருமனியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொனி எம் என்ற இசக்குழுவில் ஒரேயொரு ஆண் பாடகராக இணைக்கப்பட்டார். ஏனைய மூவரும் பெண்கள் ஆவர். அவரது மேடைப் பாடல், மேடை நடனங்கள் பலராலும் ரசிக்கப்பட்டன.

1978 ஆம் ஆண்டில் "டாடி கூல்" என்ற தனது முதலாவது பாடல் மூலம் பொனி எம். குழு புகழ் பெற்றது. அதே ஆண்டு "றிவர்ஸ் ஒஃப் பாபிலோன்" என்ற பாடலுடன் சேர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவில் மட்டும் 2 மில்லியன் இசைத்தட்டுகள் விற்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து, ஃபாரெல் தனியே வேறு மூன்று பெண் பாடகியருடன் இணைந்து "Bobby Farrell of Boney M." என்ற பெயரில் தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார்.


நெதர்லாந்தில் வசித்து வந்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.


மூலம்

தொகு