பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஏப்பிரல் 1, 2015

மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமை குறித்த ஒரு நாள் பயிலரங்கத்தை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல் துறையுடன் இணைந்து மார்ச்சு 31, 2015 செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்த்தியது. இப்பயிலரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள அறிவியல்புலக் கூடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிகழ்ந்தது. இப்பயிலரங்கின் வரவேற்புரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம.சாதிக் பாட்சா வழங்கினார், தலைமையுரையை பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மேம்பாட்டு அவையின் புல முதன்மையர் பேராசிரியர் பழனிவேல் வழங்கினார், பயிலரங்க வாழ்த்துரையினை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் சு.நந்தகுமார், நூலகர் பேரா. நா. சுப்பிரமணி ஆகியோர்கள் வழங்கினார், பயிலரங்கின் நோக்கவுரையை இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி வழங்கினார், நிகழ்வின் நன்றியுரையை முனைவர் எ. சி கவிதா வழங்கினார்.

இப்பயிலரங்கின் பயிற்சிகள் இரண்டு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கான நேரிடைப் பயிற்சியை மக்கள் தொடர்பியல் துறையின் உதவிப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி அளித்தார். முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த முழுமையான அறிமுகத்துடன் தமிழ் உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பெற்றது.

மதியம் நிகழந்த இரண்டாம் அமர்வில் விக்கி பொதுவகத்தில் காட்சிக்கூடங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியங்களை மின் ஆவணங்களாக (GLAM) மாற்றும் பயிற்சி, திறவூற்று மென்மங்கள், தமிழ் மென்மங்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பெற்றது.

இப்பயிலரங்கின் நிறைவுவிழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எம். ஜெயப்பிரகாஷ் வரவேற்புரையை நிகழ்த்தினார். பயிலரங்க அறிக்கையை நன்றியுரையை முனைவர் எ. சி கவிதா வழங்கினார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழை பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் பேராசிரியர் எஸ். லீலா வழங்கினார், பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம. சாதிக் பாட்சா நன்றியுரை வழங்கினார்.

இப்பயிலரங்கின் அமைப்பாளராக பெரியார் பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் ம. சாதிக் பாட்சாவும், ஒருங்கிணைப்புச் செயலராக முனைவர் எ. சி கவிதாவும், ஒருங்கிணைப்குழு உறுப்பினர்களாக முனைவர் என். இராதாகிருஷ்ணன், முனைவர். கோமதி, முனைவர் எம். ஜெயப்பிரகாஷ், முனைவர் எம். பழனியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியை சு. சுதா, அ. ரூபிநந்தினி ஆகிய முனைவர்ப் பட்ட மாணவர்கள் தொகுத்து வழங்கினர்.

இப்பயிலரங்கில் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறை, இதழியல், மக்கள் தொடர்பியல், கல்வியல் துறைகளைச்சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர், முனைவர்ப்பட்ட ஆய்வு மாணவர்களும் மின் ஆவண ஆக்க மற்றும் தமிழ்க்கணிமைப் பணிகளின் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

பயிலரங்கக் காட்சிக்கூடம்

தொகு