கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு

வியாழன், செப்டம்பர் 17, 2009, சென்னை:


"ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவை நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படும்" என்று தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி அறிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


சென்னையில் நடந்த மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள், காவ‌ல்துறை அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு மாநாட்டில் பேசிய அவர், "மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள், காவ‌ல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் பொது மக்களிடமும் அலுவலகத்திலும் தமிழில் பேச வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

"ஏற்கனவே அண்ணா இருந்தபோது உலகத்தமிழ் மாநாடு நடந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் போதும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன, எனவே நமது ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள், புலவர்கள், பத்திரிகையாளர்கள், அய‌ல்நாட்டில் உள்ள தமிழ் விற்பன்னர்கள் போன்றோர் வற்புறுத்தி வருவதாகவும் எனவே அடுத்த ஆண்டு மாநாட்டை தமிழகத்தில் நடத்தவிருப்பதாகவும்" அவர் மேலும் கூறினார்.


இதன்பின், அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பீடம் ஏறியதும் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, பல்வேறு நாடுகளிலும் தமிழகத்திலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் கோவை நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டை நடத்துவதற்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், பல்வேறு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.

மூலம் தொகு