பாக்கித்தான் குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதன், சனவரி 11, 2012

பாக்கித்தானின் வடமேற்குப் பகுதியில் கைபர் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள சந்தையொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.


கைபர் பழங்குடியினப் பகுதியில் உள்ள ஜம்ருட் நகரில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றது. இங்குள்ள சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. தூரத்தில் இருந்து வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் அந்த வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவரும் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் அருகிலிருந்த பெட்ரோல் நிரப்பு நிலையமும், சில வாகனங்களும் சேதமுற்றன. காயமுற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலும், ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.


இந்தப் பகுதியில் தெஹ்ரிக்-இ-தலிபான், லஷ்கர்-இ-இஸ்லாம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் அரசு மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று அந்த அமைப்பு ஏற்கெனவே எச்சரித்து இருந்தது. ஆனாலும் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


மூலம் தொகு