பாக்கித்தானில் பெண் தற்கொலைதாரியின் குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்

சனி, திசம்பர் 25, 2010

வடமேற்குப் பாக்கித்தானில் உணவு நிவாரணம் பெற்றுக் கொள்ளப் பெருந்தொகையானோர் கூடியிருந்த வேளையில் பெண் தற்கொலைதாரி ஒருவர் தனது குண்டை வெடிக்க வைத்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.


ஆப்கானித்தான் எல்லைப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வாழும் பஜாவுர் பிரதேசத்தில் கார் என்ற நகரப் பகுதியில் இன்று சனிக்கிழமை இத்தாக்குதல் இடம்பெற்றது. இப்பகுதி தலிபான்களினதும், அல்-கைடா தீவிரவாதிகளினது பலம் வாய்ந்த பகுதியாகும். இடம்பெயர்ந்த மக்கள் தமது உணவு நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காக அங்கு கூடியிருந்தனர். உலக உணவுத் திட்டம் மற்றும் நிவாரண அமைப்புகள் இப்பகுதியில் நிலை கொண்டுள்ளன. எவரும் இத்தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை.


பாக்கித்தானின் வடமேற்குப் பகுதியில் அண்மக்காலங்களில் பொது மக்கள் மீது பெருமளவு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.


காயமடைந்த பலர் உலங்குவானூர்தி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தோர் சலர்சாய் இன மக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தாலிபான்களுக்கு எதிரான இராணுவத்தினரின் தாக்குதல்களை இந்த இனத்தோர் ஆதரித்து வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நேற்று வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் 11 பாகித்தானிய இராணுவத்தினரும் 24 போராளிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 150 தலிபான் போராளிகள் பங்குபற்றியிருந்தனர்.


1996-2001 காலப்பகுதியில் ஆப்கானித்தானில் தலிபான்களின் ஆட்சியை ஆதரித்து வந்த பாக்கித்தான் பின்னர் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க ஊடுருவலை அடுத்து அமெரிக்காவுடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகிறது.


மூலம் தொகு