பாக்கித்தானில் புதிய நாடாளுமன்றம் பதவியேற்றது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, சூன் 1, 2013

பாக்கித்தானின் 14வது தேசியப் பேரவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் பாக்கித்தானின் 66 ஆண்டுகால வரலாற்றில் முதற் தடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாற்று அரசுக்கு ஆட்சியைக் கொடுத்துள்ளது.


நவாஸ் ஷெரீப்

தலைநகர் இசுலாமாபாதில் பலத்த பாதுகாப்பின் மத்தியில் புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். 13-வது அவையின் அவை முதல்வர் பெக்மிதா மிர்சா புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாக்கித்தான் முஸ்லிம் லீக் கட்சி மே மாதம் 11 இல் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 342 இடங்களில் 176 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருந்தது. ஆளும் பாக்கித்தான் மக்கள் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது. இது 39 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது.


புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 63 வயதுள்ள ஷெரீப் 1990 முதல் 1993 வரையும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு தடவைகள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக 1998 இல் பாகிஸ்தானில் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதில் இவர் பரவலாக அறியப்பட்டவர். பெர்வேஸ் முஷாரப்பினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.


மூலம்

தொகு