பாக்கித்தானில் பனிச்சரிவு, நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் புதையுண்டனர்

சனி, ஏப்பிரல் 7, 2012

சர்ச்சைக்குரிய காஷ்மீரியப் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் பனிச்சரிவில் குறைந்தது 100 பாக்கித்தானிய இராணுவத்தினர் உயிருடன் புதையுண்டனர் என இராணுவம் அறிவித்துள்ளது.


சியாச்சென் பனியாறின் அமைவிடம்

இறந்தவர்கள் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாக்கித்தானிய இராணுவப் பேச்சாளர் எவ்வளவு பேர் உயிர் தப்பினர் என்பது பற்றித் தெரிவிக்கவில்லை.


இமாலயத்தின் கரக்கோரம் பகுதியில் உள்ள சியாச்சென் பனியாற்றின் அருகேயுள்ள இராணுவ முகாம் இன்று அதிகாலை உள்ளூர் நேரம் 06:00 மணியளவில் பனிச்சரிவினால் புதையுண்டது. புதையுண்டவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 130 பேர் வரையில் புதையுண்டிருக்கலாம் எனச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


சியாச்சென் பனியாற்றுப் பகுதி உள்ள மலைப்பகுதிக்கு பாக்கித்தான், இந்தியா இரண்டு நாடுகளும் உரிமை கோருகின்றன. 1947 ஆம் ஆண்டில் இருந்து காஷ்மீர் இந்தியா, மற்றும் பாக்கித்தான் நாடுகளுக்கிடையே பிரிக்கப்பட்டுள்ளன. சியாச்சென் பனியாற்றுப் பகுதி உலகின் மிக உயரமான போர்முனையாகும். 6,700 மீட்டர் உயரம் வரையில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், போர்முனையை விட கடுமையான காலநிலை காரணமாகவே இப்பகுதியில் பெரும்பாலான படையினர் இறந்துள்ளனர்.


மூலம் தொகு