பாக்கித்தானில் தாலிபான்கள் சிறை உடைப்பு, 248 கைதிகள் விடுவிப்பு

செவ்வாய், சூலை 30, 2013

பாக்கித்தானின் வட-மேற்கே உள்ள சிறைச்சாலை ஒன்றைத் தாக்கிய தலிபான்கள் அங்கிருந்த 248 சிறைக்கைதிகளை விடுவித்தனர்.


தானியங்கித் துப்பாக்கிகள், மோட்டார்கள், கிரனேடுகள் கொண்டு சிறைச்சாலையின் சுவரைத் தகர்த்து சிறைச்சாலைக்குள் தாலிபான்கள் நுழைந்தனர். இச்சம்பவம் தேரா இசுமாயில் கான் என்ற நகரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளது. பல மணி நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. ஆறு காவல்துறையினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தாக்குதலில் நூறு போராளிகள் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் காவல்துறையினரின் சீருடை அணிந்திருந்தனர். தாக்குதலுக்குள்ளான சிறைச்சாலை நூற்றாண்டு காலப் பழமையானது எனவும், அதிக பாதுகாப்பு அற்றதுமாகும் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சிறையில் இருந்து 5 பெண் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பெண் சிறைக் காவலாளியையும் தலிபான்கள் கொண்டு சென்றுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 30 தலிபான் தளபதிகளும் அடங்கியுள்ளனர். நகரப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதே போன்றதொரு தாக்குதல் பான்னு என்ற இடத்தில் இடம்பெற்றதில் 400 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.


மூலம் தொகு