பாக்கித்தானின் தென்மேற்கில் கடும் நிலநடுக்கம்

புதன், சனவரி 19, 2011

பாக்கித்தானின் தென்மேற்கில் பலுச்சித்தான் மாகாணத்தில், ஈரான், மற்றும் ஆப்கானித்தான் எல்லைப் பகுதியில் உள்ள பாலைவனப் பகுதியில் 7.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இன்று புதன்கிழமை அதிகாலை 0123 மணிக்கு பாக்கித்தானின் டால்பாண்டின் நகருக்கு மேற்கே 55 கிமீ தூரத்தில், 84 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதியின் அருகே உள்ள நகரங்களில் சேதம் அதிகம் ஏற்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். டல்பாண்டின் நகரில் வீடுகளின் கூரைகள் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்ததாக மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் அமனுல்லா நொட்டிசாய் தெரிவித்தார். டால்பாண்டின் நகரில் கிட்டத்தட்ட 15,000 பேர் வசிக்கின்றனர்.


ஆரம்பத்தில், இந்நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக இத்தகைய ஆழம் பெரும் சேதங்களை உண்டு பண்ண வல்லது. பின்னர் இதன் ஆழம் 84 கிமீ ஆகக் கூறப்பட்டது. இதனால் சேதம் அதிகம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும், இந்நிலநடுக்கம் இந்தியாவில் தில்லி வரையிலும், துபாய், கட்டார் வரையிலும் உணரப்பட்டது.


2005 அக்டோபரில் காஷ்மீரில் இடம்பெற்ற 7.6 அளவு நிலநடுக்கத்தில் 73,000 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு