பாக்கித்தானின் சிறுபான்மையின அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டார்

புதன், மார்ச்சு 2, 2011

பாக்கித்தானின் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சாபாஸ் பட்டி தலைநகர் இசுலாமாபாத் நகரில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டி சென்று கொண்டிருந்த வாகனம் மீது இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமைச்சர் உயிரிழந்தார்.


பணிக்காக வீட்டில் இருந்து அமைச்சர் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அதிகாரி முகமது இக்பால் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு கிறித்தவ உறுப்பினராக பட்டி விளங்கினார். இவர் பாக்கித்தானின் சர்ச்சைக்குரிய மத நிந்தனைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர். இதனால் இவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வந்தது.


கடந்த சனவரி மாதத்தில், இச்சட்டத்தை எதிர்த்து வந்த பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் டசீர் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.


பாக்கித்தானில் இசுலாம் மதத்தை எதிர்ப்போரின் மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு