பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்

சனி, சூலை 10, 2010

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பழங்குடியினர் வாழும் கிராமம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 102 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 115 பேர் காயமடைந்தனர்.


நடுவண் அரசு ஆட்சியில் உள்ள பழங்குடியினர் பிரதேசம் (நீலம்)

மோஹ்மண்ட் என்ற பழங்குடியினர் வாழும் பிரதேசத்தில் யாக்ககுண்ட் என்ற கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இந்த இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் வீடுகள், கடைகள், அரசாங்கக் கட்டடங்கள் பல சேதமடைந்தன.


இப்பகுதி அல்-கைதா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் பகுதி ஆகும். தலிபான்கள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.


அன்பார் உத்மான்கெல் என்ற பழங்குடியினரிடையேயுள்ள தலிபான்களுக்கு எதிரான தலைவர்களுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையே தாம் குறி வைத்ததாக தலிபான்களின் உள்ளூர் பேச்சாளர் இக்ராமுல்லா மொஹ்மாண்ட் தெரிவித்தார்.


ஒரு தற்கொலைதாரி மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மற்றவர் வெடிமருந்து நிரப்பிய வாகனம் ஒன்றில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குண்டுவெடிப்பில் அருகில் இருந்த சிறைச்சாலை ஒன்று சேதமடைந்ததால் 28 சிறைக்கைதிகள் தப்பித்தனர் என்றும், அவர்கள் எவரும் போராளிகள் அல்லர் எனவும் ரசூல் கான் என்ற அதிகாரி தெரிவித்தார். 80 கடைகள் சேதமடைந்துள்ளன.

மூலம்

தொகு