பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது

புதன், சூலை 28, 2010


152 பேருடன் பயணம் செய்த பாகிஸ்தானிய விமானம் ஒன்று தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மார்கலா மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.


குறைந்தது 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிருடன் எவரும் தப்பியிருப்பார்களெனத் தாம் நம்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்று கொண்டிருந்த ஏர்புளூ என்ற பயணிகள் விமானத்தில் 146 பயணிகளும் 6 சிப்பந்திகளும் பயணித்தனர். இன்று காலை உள்ளூர் நேரப்படி 0750 மணிக்கு கராச்சியை விட்டு இது புறப்பட்டது.


தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் அதனுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கடுமையான தீப்பிழம்பும், புகைமூட்டமும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.


முன்னதாக ஆறு பயணிகள் படுகாயங்களுடன் தப்பியதாக தகவல்கள் வந்திருந்தாலும், அத்தகவல் தவாறானதெனப் பின்னர் அறிவிக்கப்பட்டது.


அப்பகுதியில் பெரு மழை பொழிந்து கொண்டிருப்பதால மீட்புப் பணிகள் மிகத் தாமதமாகவே நடைபெற்று வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விபத்தில் சதி்ச்செயல் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலம் தொகு