பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 34 பேர் உயிரிழப்பு

திங்கள், சூன் 13, 2011

வட-மேற்குப் பாக்கித்தானின் பெஷாவர் நகரில் உள்ள கைபர் சந்தையில் நேற்று முன்தினம் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


நள்ளிரவுக்குச் சற்று நேரத்தின் பின்னர் இக்குண்டுகள் வெடித்துள்ளன. குண்டுவெடிப்பு நடந்த இடம் இராணுவ, மற்றும் அரசியல் அலுவலகங்கள் நிறைந்துள்ள பகுதியாகும். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இந்த பகுதியில் மின்தடை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் இந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அல்-கைதா தலைவர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் பாக்கித்தானில் நடந்துள்ள மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவமாக இது கருதப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பெஷாவரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.


ஆப்கானிய அரசுத்தலைவர் அமித் கர்சாய் பாக்கித்தான் தலைநகர் இசுலாமாபாதிற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள வேளையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.


பாக்கித்தானியப் பிரதமர் யூசுப் ராசா கிலானி செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், ஆப்கானித்தானில் அமைதியைக் கொண்டுவர தாம் தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனக் கூறினார். அதே வேளையில், காபூல் அரசு தாலிபான்களுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறினார்.


மூலம் தொகு