பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் தற்கொலைக்குண்டு வெடித்ததில் பலர் உயிரிழப்பு

செப்டம்பர் 3, 2010

தென்மேற்கு பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சியா முஸ்லிம்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் மனிதக் குண்டு வெடித்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் காயமடைந்தனர்.


பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஒரு ஆர்பாட்டப் பேரணியிலேயே இக்குண்டு வெடித்துள்ளது. பாகிஸ்தானின் சியா முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.


நாங்கு பாகிஸ்தானிய செய்தியாளர்களும் கொல்லப்பட்டவரக்ளில் அடங்குவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சியா தலைவர் அலாமா அபாஸ் குமாயிலி மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினார். பாகிஸ்தானிய தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், "சுணி மற்றும் சியா முஸ்லிம்களை ஒருவருக்கொருவர் பகைத்துக் கொள்ள மேற்கொள்லப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றே இத்தாக்குதல்," எனக் கூறினார்.


பாகிஸ்தானில் சுணி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சியா முஸ்லிம்கள் 20 விழுக்காட்டினர் ஆவர்.


கடந்த புதன்கிழமை லாகூரில் சியாக்களின் ஊர்வலம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு சுணி தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்காகத் தாமே இத்தாக்குதலை நடத்தியிருந்ததாக தலிபான்கள் கூறியிருந்தனர்.

மூலம்

தொகு