பழம்பெரும் பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் காலமானார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, ஏப்பிரல் 14, 2013

காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடிய பிரபல தென்னிந்தியத் திரைப்படப் பின்னணி பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ் சென்னையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 82.


ஆந்திர மாநிலத்தில் பத்தளபொடி என்னும் கிராமத்தில் பிறந்த ஸ்ரீநிவாஸ் 1952 ஆம் ஆண்டில் முதன் முதலாக மிஸ்டர் சம்பத் என்ற இந்தித் திரைப்படத்தில் பின்னணி பாடினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜாதகம் என்ற திரைப்படத்தில் "சிந்தனை என் செல்வமே" என்ற பாடல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஜெமினி கணேசனுக்கும், கன்னட நடிகர் ராஜ்குமாருக்கும் தான் அநேக பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலைப் பாடியிருந்தார்.


தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஸ்ரீநிவாஸ் சென்னை, சி.ஐ.டி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது இறுதிச் சடங்கு நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. கலையுலகப் பிரமுகர்கள் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மூலம்

தொகு