பழம்பெரும் நடிகை எஸ். என். லட்சுமி காலமானார்

திங்கள், பெப்பிரவரி 20, 2012

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை எஸ். என். லட்சுமி நேற்று நள்ளிரவில் செ‌ன்னை‌யி‌ல் காலமானா‌ர். அவருக்கு வயது 80. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.


எஸ்.என்.லட்சுமி பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். அண்மைக்காலத்தில் மகாந‌தி, விருமா‌ண்டி, தேவ‌ர்மக‌ன் உ‌ள்‌ளி‌ட்ட பட‌ங்க‌ளி‌ல் மூ‌த்த வேட‌ங்க‌ளி‌ல் நடி‌த்து இரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார்.


நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந்தரின் ராகினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளில் நடித்து மெருகேறியவர். த‌ற்போது தெ‌‌ன்ற‌ல் எ‌ன்ற தொலை‌க்க‌ட்‌சி தொட‌ரி‌‌ல் நடி‌த்து வ‌ந்தா‌ர் லட‌்சு‌மி.


இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மூலம் தொகு