பக்ரைன் ஆர்ப்பாட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் தடை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, பெப்பிரவரி 18, 2011

மத்திய கிழக்கு நாடான பக்ரைன் தலைநகர் மனாமாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அந்நாட்டில் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக எவ்விதமான கடின நடவடிக்கையையும் எடுக்கத் தயார் என்று அவ்வமைச்சகம் கூறுகிறது.


நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டவர்களில் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்ற போது அதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு இறக்கவும் தயார் என அவர்கள் கூறுகின்றனர்.


அரசு எதிர்ப்பாலர்களுக்கு எதிராக அரசுக்கு ஆதரவானவர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களில் இறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மனாமாவின் முக்கிய வீதிகளில் இராணுவத்தாங்கிகள் நிலை கொண்டுள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் எடுப்பர் என உட்துறை அமைச்ச்சு தெரிவித்துள்ளது.


நேற்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கை இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் நால்வர் இறந்துள்ளதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. முந்நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.


பக்ரைன் நாட்டின் பெரும்பான்மை மக்களான ஷியா மக்களுக்கும், ஆட்சியதிகாரத்தைக் தம் வசம் கொண்டுள்ள சிறுபான்மை சுன்னி மேட்டுக்குடிக்கும் இடையில் நெடுங்காலமாக கனன்றுகொண்டிருக்கும் பதற்றம்தான் அங்கே கொந்தளிப்பு ஏற்படுவதற்கு மூல காரணம் எனக் கூறப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு சுன்னி மேல்குடி மக்களுக்கும், பெரும்பான்மை ஷியாவினருக்கும் இடையில் அடிக்கடி இங்கு முறுகல் நிலை இடம்பெற்று வந்துள்ளது. பக்ரைனின் மொத்த மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவானதாகும்.


மூலம்

தொகு