நைஜரில் கடத்தப்பட்ட இரு பிரான்சியர்கள் மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்

திங்கள், சனவரி 10, 2011

ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடத்தப்பட்ட இரண்டு பிரான்சியர்களும் கடத்தல்காரர்களினாலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடந்த வெள்ளிக்கிழமை அன்று நைஜரின் தலைநகர் நியாமியில் வைத்துக் கடத்தப்பட்ட இரு பிரெஞ்சுப் பிரஜைகளையும் பிரெஞ்சு இராணுவத்தினர் விடுவிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர்கள் இருவரும் இறந்த நிலையில் இருக்கக் காணப்பட்டனர்.


இவர்களின் கடத்தலுக்கு எக்குழுவும் இதுவரையில் உரிமை கோரவில்லை எனினும், அல்-கைதாவின் வடக்கு ஆப்பிரிக்கக் குழு முன்னர் பல கடத்தல்களை இப்பகுதியில் மேற்கொண்டிருந்தது.


நிவாரணப் பணியாளர் அண்டன் டி லூக்கோ மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைநகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் வைத்து துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். லூக்கோவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவரது நண்பர் நைஜர் வந்திருந்தார். நைஜரின் தேசியப் பாதுகாப்புப் படையினரும் பிரெஞ்சு விமானம் ஒன்றும் கடத்தல்காரரை பாலைவனம் வர துரத்திச் சென்றதாக பிரெஞ்சு இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.


இரண்டாவது தாக்குதலில் பல கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பிரெஞ்சுப் பிரசைகளும் இதன் போது கொல்லப்பட்டனர்.


"அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது இவர்கள் இருவரும் கடத்தல்காரர்களினால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே கருத இடமுண்டு," என பிரெஞ்சு அதிகாரி தெரிவித்தார்.


குறித்த இருவரும் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு அரசுத்தலைவர் நிக்கொலா சார்க்கோசி "இது ஒரு கோழைத்தனமான செயல்," எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐந்து பிரெஞ்சுப் பிரசைகள் போராளிகளால் கடத்தப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லை.


மூலம்