நைஜரில் இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் கைது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, பெப்பிரவரி 19, 2010


மேற்கு ஆப்பிரிக்கக் குடியரசான நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத் தலைவர் தாஞ்சா மமடோவு கைது செய்யப்பட்டு இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "மக்களாட்சியைக் காப்பதற்கான அதிஉயர் மன்றம்" என்ற பெயரில் நைஜரின் இராணுவத்தினர் அதிபர் மாளிகையை நேற்று வியாழக்கிழமை தாக்கியதை அடுத்தே அரசுத்தலைவர் கைது செய்யப்பட்டார்.


அரசுத் தலைவர் தாஞ்சா மமடோவு

அரசுத்தலைவரும் அவரது அமைச்சர்களும் "பாதுகாப்பாகவும் நலமாகவும்" உள்ளதாக லண்டனில் உள்ள நைஜரின் தூதரகம் அறிவித்துள்ளது. ஆனாலும் அதிபர் உட்பட அவரது சகாக்கள் தலைநகர் நியாமிக்கு வெளியே இராணுவ நிலையொன்றில் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


நாட்டின் அரசியலமைப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரச நிறுவனங்களும் கலைக்கப்பட்டுள்ளதாகவும் புரட்சியை முன்னெடுத்த குழுவின் பேச்சாளரான இராணுவத் தளபதி ஒருவர் அறிவித்தார். இப்புரட்சிக்கு யார் தலைமை வகித்தார்கள் என்பது உடனடியாகத் தெரியயவிட்டாலும், மேஜர் அடாமூ ஹரூனா என்னும் இராணுவத் தலைவரே இதற்குக் காரணம் என பல இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே புரட்சி இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பல மணிநேரம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அதிபர் மாளிகையைச் சுற்றி கேட்டன. சண்டை உள்ளூர் நேரப்படி பகல் 1:00 மணிக்கு ஆரம்பித்தது.


இராணுவத்தினரில் மூன்று பேர் இறந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.


இவ்விராணுவப் புரட்சியை ஆப்பிரிக்க ஒன்றியம் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


அரசுத்தலைவர் தாஞ்சா நாட்டின் நாடாளுமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றைக் கலைத்து, தனது பதவிக்காலத்தை மேலும் மூன்றாண்டுகள் நீட்டித்ததை அடுத்தே இந்தப் புரட்சி இடம்பெற்றுள்ளது. அரசுத்தலைவரின் இந்த செயற்பாடு அவருக்கெதிராக பல அழுத்தங்களைப் பல்வேறு மட்டங்களிலும் தோற்றுவித்திருந்தது. கடந்த வாரம் அங்கு ஆயிரக்கணக்கானோர் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மூலம்

தொகு