நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாக்கித்தான் பிரதமர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, சனவரி 20, 2012


பாக்கித்தான் அரசுத்தலைவர் ஆசிப் அலி சர்தாரி உட்பட பல முக்கிய தலைவர்களின் ஊழல் வழக்குகள் தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் கிலானி நேற்றுக் காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக சமூகமளித்தார்.


முன்னாள் அரசுத்தலைவர் பர்வேசு முசாரப் தனது பதவிக் காலத்தில் தள்ளுபடி செய்திருந்த பல முக்கிய அரசியல் தலைவர்களின் ஊழல் வழக்கு விசாரணைகளை மீளத் தொடங்குமாறு உச்ச நீதிமன்றம் பிரதமரை முன்னர் கேட்டுக் கொண்டது. ஆனாலும், இது தொடர்பாக பிரதமர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததை அடுத்து அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு கடிதம் அனுப்ப உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் திகதி உத்தரவிட்டு, நீதிமன்றத்திற்கு நேரில் சமூகமளிக்க வேண்டும் வேண்டுமெனவும் உத்தரவிட்டது.


இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் பிரதமர் கிலானி நீதிமன்றத்தில் சமூகமளித்தார். நீதிபதி நசீர் உல் முல்க் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து சமூகமளித்தமைக்காக, நீதிபதிகள் கிலானிக்கு பாராட்டு தெரிவித்தனர். விசாரணையின் போது "ஆசிப் அலி சர்தாரி மீதான நிதி முறைகேடு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகளை செயல்படுத்தாதது ஏன்?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது: "நீதித்துறையை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. தவிர உலகளவில் சனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது. அதுபோல் தான் பாக்கித்தான் சனாதிபதிக்கும் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்று நான் நினைத்துப் கூடப் பார்க்கவில்லை," என்று கூறினார்.


பிரதமர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அயித்சாஷ் அக்சன் கூறுகையில், 'வியன்னா உடன்படிக்கையின்படி, உலக நாடுகளின் எந்தவொரு அதிபரின் மீதும் வழக்கு தொடர முடியாது. எனவே, இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசிடம் கடிதம் எழுதுமாறு நீதிமன்றம் பிரதமருக்கு அறிவுறுத்தக்கூடாது. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை அரசு செயல்படுத்தாதது குறித்து சட்டத்துறை செயலாளர் விளக்கம் அளிப்பார்' என்றார். 'அரசியல் சாசனச் சட்டத்தின்படி அதிபருக்கு எதிராக வழக்குத் தொடர்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகாவிட்டால், வழக்கை விசாரிக்க சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதுவீர்களா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 'இது தொடர்பாக ஆவணங்களைப் படித்துப் பார்த்த பின்தான் பதில் கூற முடியும். அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவை' என்று பிரதமரின் வழக்குரைஞர் பதிலளித்தார்.


அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அப்போது சர்தாரி மீது நடவடிக்கை எடுக்காததற்கான உரிய காரணத்தை, ஆவணமாக நீதிமன்றத்தில் அரசு ஒப்படைக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில் கிலானி இனிமேல் நீதிமன்றத்தில் சமூகமளிக்கத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் ஒருவர் சமூகமளிப்பது இது 3வது முறையாகும். இதற்கு முன் சுல்பிக்கார் அலி பூட்டோ, மற்றும் நவாஸ் ஷெரீப் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு