தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, ஏப்பிரல் 23, 2011

தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து உடனடியாக விலகுவதாக இலங்கையின் முன்னணித் துடுப்பாட்ட வீரர் லசித் மாலிங்க நேற்று அறிவித்துள்ளார். வலது முழங்காலில் நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள உபாதையை கருத்திற் கொண்டே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக லசித் மலிங்க அறிவித்துள்ளார். எனினும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 27 வயதான மாலிங்க இதுவரை இலங்கை அணிக்காக 30 தேர்வுப் போட்டிகளில் பங்குபற்றி 101 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.


எனினும், ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் 20-20 போட்டிகளிலும் தான் விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு 20-20 உலகக் கிண்ணம் மற்றும் 2015ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என்பவற்றில் பங்குபற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் நாடு திரும்பியதும் தனது இந்த முடிவு குறித்து இலங்கை அணித் தேர்வுக் குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஐபிஎல் போட்டிகளில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்க்குகளை வீழ்த்துபவரின் முன்னணியில் திகழுகிறார். இன்றைய அவரது முடிவை அடுத்து ஐபிஎல் இன் இவ்வாண்டுக்கான அனைத்துப் போட்டிகளிலும் மாலிங்க பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது நீண்ட நாளையத் துடுப்பாட்ட வாழ்க்கையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து அணியுடனான எதிர்வரும் தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதைக் கருத்திற் கொண்டு அவரை நாடு திரும்புமாறு இலங்கைத் துடுப்பாட்ட சபை கோரிக்கை விடுத்திருந்தது. காயம் காரணமாக தன்னால் இங்கிலாந்துடனான தேர்வுப் போட்டிகளில் பங்குபற்ற முடியாதுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், அவர் தொடர்ந்தும் ஐபிஎல் போட்டிகளில் பங்குபற்றுவது குறித்து விசனம் தெரிவித்திருந்த இலங்கைத் துடுப்பாட்ட வாரியம், மாலிங்கவை நாடு திரும்பி, காயத்திற்கு சிகிச்சை பெறுமாறு முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.


மூலம்

தொகு