துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதிக்குத் தப்பியோடினார்
சனி, சனவரி 15, 2011
- 21 பெப்பிரவரி 2014: நோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு
- 26 சூலை 2013: துனீசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை
- 4 சூன் 2011: லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர்
- 15 சனவரி 2011: துனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதிக்குத் தப்பியோடினார்
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் கடந்த சில நாட்களாக மக்கள் நடத்திய வீதிப் போராட்டங்களை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் பென் அலி நாட்டை விட்டு வெளியேறினார். தலைநகர் தூனிசில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூனிசில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் முகமது கனூச்சி இடைக்கால அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவதே தமது அடுத்த பணியாக இருக்கும் என அவர் கூறினார். கூட்டணி அரசு அமைப்பதற்குத் தாம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.
1987 ஆம் ஆண்டு முதல் பென் அலியின் தலைமையிலான அரசு துனீசியாவை ஆட்சி புரிந்து வருகிறது. 2014 இலேயே தாம் அதிபர் பதவியிலிருந்து விலகுவேன் என பென் அலி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம், உணவு விலை அதிகரிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு எதிராக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் தலைநகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பென் அலி பதவி துறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பென் அலி ஆட்சிக்கு வந்தபிறகு முதல் முறையாக இத்தகையதொரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக அவதானிகள் தெரிவித்தனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
நகர்ப்புறங்களில் பல இடங்களில் சூறையாடல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தூனிசின் முக்கிய தொடருந்து நிலையம் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.
இடைக்கால அரசு நாட்டில் பொருளாதார, அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும் என மக்கள் எதிர்பார்த்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
நேற்று வெள்ளிக்கிழமை அன்று நாட்டை விட்டு வெளியேறிய அரசுத்தலைவர் பென் அலி (வயது 74), மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சவுதி அரேபியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பென் அலி பயணம் செய்த விமானத்தைத் தமது நாட்டில் தரையிறங்க பிரெஞ்சு அரசு மறுத்து விட்டது. அதன் பின்னர் எரிபொருள் நிரப்புவதற்காக இத்தாலியத் தீவான சார்டீனியாவில் தரையிறங்கிய பின்னர் சவுதி அரேபியா சென்றது.
இரண்டு வாரங்களாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் 60க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
1956 ஆம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் பதவிக்கு வந்த இரண்டாவது அரசுத்தலைவர் பென் அலி ஆவார். கடைசியாக 2009 ஆம் ஆண்டில் இவர் 89.62% வாக்குகளால் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
மூலம்
- Tunisia: security stepped up after leader Ben Ali flees, பிபிசி, சனவரி 15, 2011
- Tunisia unrest a wake-up call for the region, கார்டியன், சனவரி 14, 2011
- Tunisian president forced from power as state of emergency declared, டெய்லி டெலிகிராஃப், சனவரி 14, 2011
- Tunisia's Ben Ali flees amid unrest, அல்ஜசீரா, சனவரி 15, 2011