துனீசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை

வெள்ளி, சூலை 26, 2013

துனீசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் முகம்மது பிராமி நேற்று வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து இனந்தெரியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையை அடுத்து தலைநகரிலும் ஏனைய பகுதிகளிலும் இசுலாமிய அரசிற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று நாட்டில் பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.


நாட்டின் முக்கிய இசுலாமியக் கட்சியான என்னாடா கட்சியினரே இக்கொலையைச் செய்ததாக பிராமியின் சகோதரி கருத்துத் தெரிவித்துள்ளார்.


தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து தனது கணவர் வெளியே சென்றதாகவும், வெளியே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் தனது கணவர் கீழே வீழ்ந்து கிடந்ததாகவும், இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியதை கண்டதாகவும் பிராமியின் மனைவி கூறினார்.


பிராமி மதச்சார்பற்ற அரபு தேசியவாத வெகுசன முன்னணிக் கட்சியின் தலைவர் ஆவார். இக்கட்சியின் முன்னாள் தலைவர் சோக்ரி பெலாட் கடந்த பெப்ரவரி 6 ஆம் நாள் இதே போன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலையின் பின்னர் நாட்டில் பல வன்முறைகள் இடம்பெற்றன.


58 வயதுள்ள முகம்மது பிராமி என்னாடா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர்.


துனீசியாவின் முன்னாள் ஆட்சியாளர் பென் அலி 2011 சனவரியில் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து இசுலாமிய என்னாடா கட்சி சிறிய மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனாலும், நாட்டின் தீவிரவாத சலாபி இசுலாமியர்களின் பிடியில் ஆட்சி வீழ்ந்து விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.


பெயாயிடுவின் படுகொலையை சபாலி இசுலாமியக் குழுவே நடத்தியதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டினர். இக்குழுவைச் சேர்ந்த கொலையாளிகள் ஆறு பேர் தற்போது பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.


மூலம் தொகு