தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், நவம்பர் 18, 2009

தலை ஒட்டிப் பிறந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த மூன்று வயது இரட்டையர்களை 25 மணி நேர அறுவை சிகிச்சை செய்து பிரித்து ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.


3 வயதாகும் பங்களாதேஷைச் சேர்ந்த கிருஷ்ணா, திரிஷ்ணா சகோதரிகள் இரட்டையர்களாகப் பிறந்தனர். தலை ஒட்டிய நிலையில் பிறந்ததால் இருவரையும் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலிய மெல்பேர்ணிலுள்ள ரோயல் குழந்தைகள் வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் 25 மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக இருவரையும் பிரித்துள்ளனர்.


16 மருத்துவர்கள், பல தாதியர் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவினர் மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மிகவும் கவனமாக மேற்கொண்டு இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தனியே பிரித்தது மிகவும் சிறப்பானது என்று வைத்தியர் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருவராக இருந்தவர்களைப் பிரித்து இரு வேறு மனிதர்களாகப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்க நிகழ்வு.

—தலைமை மருத்துவர் லியோ டொனன்

இரு பெண் பிள்ளைகளும் "மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்" என சத்திரசிகிச்சைக்குத் தலைமை வகித்த மருத்துவர் லியோ டொனன் தெரிவித்தார். "ஒருவராக இருந்தவர்களைப் பிரித்து இரு வேறு மனிதர்களாகப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்க நிகழ்வு" என அவர் கூறினார்.


ஆயுட்காலத்தில் ஒருமுறை மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை என்று இதனை மருத்துவ உலகம் வர்ணித்துள்ளது. இந்தக் குழந்தைகள் இருவரும் ஒரு வார காலத்துக்கு மயக்க நிலையில் வைத்து கண்காணிக்கப்படவுள்ளனர். அதன் பிறகு பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் அவர்களுடைய மண்டை ஓடு சீரமைக்கப்படும்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிள்ளைகள் வங்காள தேசத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகளின் முதன்மை நிறுவனம் (Children First Foundation) என்ற அமைப்பின் மூலம் சிகிச்சைக்கெனக் கொண்டு வரப்பட்டார்கள்.


மூலம்

தொகு