தமிழறிஞர் கா. பொ. இரத்தினம் தனது 96வது அகவையில் காலமானார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 21, 2010

ஈழத்துத் தமிழ் அறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல்வாதியுமான பண்டிதர் கா. பொ. இரத்தினம் நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 96.


திருக்குறள் நெறி பரவப் பல்வேறு வழிகளில் பாடுபட்ட அறிஞர்களில் கா. பொ. இரத்தினம் குறிப்பிடத்தக்கவர். உலகத்தமிழ் மாநாடுகளுக்கு அடித்தளமான திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர். 1952ம் ஆண்டு கொழும்பில் 'தமிழ்மறைக் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்ப் பணிகளை செவ்வனே ஆற்றி வந்தவர். இவர் தமிழ், இலக்கியம் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம், அன்புச் சோலை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.


1960ஆம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965ஆம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியிலும், 1970, 1977 ஆம் ஆண்டுகளில் ஊர்காவற்துறைத் தொகுதியிலும் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.


1914ஆம் ஆண்டு வேலணையில் பிறந்த இவர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பவற்றில் பயின்று ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு இணைந்து பணியாற்றியவர். இலங்கையில் அரச கரும வெளியீடுகளில் தமிழ் மொழி அமுலாக்கல் சீராக நடைபெற உதவியவர்.


1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா சென்று தங்கியிருந்த இவர், 2003 ஆம் ஆண்டு மீண்டும் கொழும்பு திரும்பி வெள்ளவத்தையில் வசித்து வந்தார்.


கா. பொ. இரத்தினம் அவர்கள் 'தமிழ்மறைக் காவலர்', 'திருக்குறள் செல்வர்', 'குறள் ஆய்வுச் செம்மல்', 'செந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செம்மல்' ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.


மூலம்

தொகு