தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயலலிதா முடிவு

புதன், சனவரி 4, 2012

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வரையிலும் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், அதாவது 2002-ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளாகிய ஒலிம்பிக், ஆசிய, பொதுநலவாயம், தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களை கௌரவிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்க முடிவெடுத்தது.


பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை இவ்வாண்டு முதல் மேலும் உயர்த்தி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும், ஊக்கத்தொகையை உயர்த்தியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை 50 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதேபோல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 5 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாயாகவும் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் குழுப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 5 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


மூலம் தொகு