தடுப்புக் காவலில் உள்ள எகிப்தின் முன்னாள் தலைவர் மோர்சியை விடுவிக்க அமெரிக்கா கோரிக்கை

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, சூலை 13, 2013

இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டுத் தற்போது காவலில் உள்ள எகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது மோர்சியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா எகிப்திய இராணுவத்திடம் கோரியுள்ளது.


கடந்த அவாரம் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், மோர்சியை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் மோர்சிக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்புகளும் எதிர்ப்புப் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. பொதுமக்கள் பலர் வன்முறைகளில் கொல்லப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் மோர்சியின் ஆதரவாளர்கள் 50 பேர் இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டனர்.


கடந்த சில நாட்களாக மோர்சியின் ஆதரவாளர்கள் தலைநகரில் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே அமெரிக்கா இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. மோர்சியை விடுவிக்க செருமனியும் கோரியுள்ளது.


ரமழான் மாத ஆரம்ப நாளான நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கே மோர்சியின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மோர்சியை மீண்டும் அரசுத்தலைவர் பதவியில் அமரச் செய்யும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.


மோர்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் கடந்த சூலை 3 ஆம் நாள் அவர் இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆட்லி மன்சூர் என்பவரை இடைக்கால அரசுத்தலைவராக இராணுவம் நியமித்தது.


திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலை ஊக்குவித்த குற்றங்களுக்காக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ஆன்மிகத் தலைவர் முகம்மது பாடி, மற்றும் அக்கட்சியின் முக்கிய 9 உறுப்பினர்களையும் கைது செய்ய எகிப்திய அரசு புதன்கிழமை அன்று கைது ஆணை பிறப்பித்தது. எகிப்தின் இந்த முடிவை ஒபாமா நிர்வாகமும் ஐநாவும் குறை கூறியுள்ளன.


இதற்கிடையில் மன்சூரினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் அசெம் அல்-பெப்லாவி தமது அமைச்சரவையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கிளையான சுதந்திர சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் அமைச்சரவையில் தமது கட்சி இணையாது என முஸ்லிம் சகோதரத்துவம் கூறி விட்டது.


மூலம்

தொகு