டைட்டானிக் நடிகை குளோரியா ஸ்டுவர்ட் தனது 100 வது அகவையில் காலமானார்
செவ்வாய், செப்டெம்பர் 28, 2010
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
ஐக்கிய அமெரிக்காவின் அக்கடமி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்பட நடிகை குளோரியா ஸ்டுவர்ட் தனது 100வது அகவையில் காலமானார். குளோரியா மேற்கு லாஸ் ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 26 இல் காலமானதாக அவரது புதல்வி சில்வியா தாம்சன் தெரிவித்தார். குளோரியா இறப்பதற்கு முன் கடந்த ஐந்து ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இவர் தி இன்விசிபிள் மான் (1933) ஹியர் கம்ஸ் த நேவி (1934), டைட்டானிக் (1997) போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
1930களில் ஹாலிவுடின் முக்கிய நடிகையாக தோன்றி நடிக்க ஆரம்பித்தார். 1932 முதல் 1939 வரை 42 படங்களில் இவர் நடித்திருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் அதிகாரபூர்வமாக இளைப்பாறினார்.
பின்னர் இவர் 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் கேமரனின் டைட்டானிக் திரைப்படத்தில் பேரழிவில் இருந்து தப்பிய ஓல்ட் ரோஸ் என்ற பாத்திரத்திலும், நிகழ்ச்சியுரையாளராகவும் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக இவரது 87வது வயதில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட வயதில் கூடியவர் இவரே ஆவார்.
2000 ஆம் ஆண்டில் பீப்பில்ஸ் மகசீன் என்ற இதழ் இவரை உலகின் 50 அழகான நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது.
மூலம்
- Gloria Stuart, 'Titanic' actress, dies at 100, லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், செப்டம்பர் 27, 2010
- 'Titanic's' Gloria Stuart dies at 100, த ஹாலிவுட் ரிப்போர்ட்டர், செப்டம்பர் 27, 2010