டெஸ்ட் போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு பெறுகிறார்

புதன், சூலை 7, 2010

இலங்கையின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஜூலை 18 இல் காலியில் இடம்பெறவிருக்கும் இந்திய இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக நேற்று அறிவித்துள்ளார்.


முத்தையா முரளிதரன்
முரளிதரன்

38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனையை தம்மகத்தே வைத்திருக்கிறார். பன்னாட்டுக் கிரிக்கெட்டில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 1000 விக்கெட்டுகளூக்கும் மேல் கைப்பற்றிய ஒரே சர்வதேச பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆவார்.


டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் தனக்கு இனிமேல் விளையாட முடியாத ஒன்றாகி விட்டதென்று கூறிய முரளிதரன், அதற்கான உடல் வலு தன்னிடம் இனிமேல் இருப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.


முரளிதரன் 337 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 515 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த ஆண்டு வரை சில ஒரு-நாள் போட்டிகளில் விளையாடவிருப்பதாக அவர் தெரிவித்தார்.


முத்தையா முரளிதரன் ஏப்ரல் 17, 1972, கண்டியில் பிறந்தார். பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.


இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 ல் தமிழ்நாடு சென்னையில் மலர் மருத்துவமனை அதிபர் மகள் மதிமலர் ராமானுதியை திருமணம் செய்துகொண்டார்.


முரளிதரனின் 18 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது பந்து வீச்சு குறித்து பல விமரிசனங்கள் எழும்பியிருந்தன. இதனால அவர் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒரு சில ஆட்டங்களில் விளையாட முடியாமல் போனது. ஆனாலும், பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் அவரது கையசைவு குறித்து பல பரிசோதனகளை மேற்கொண்டு அவரது பந்து வீச்சில் எவ்விதக் குழப்பமும் இல்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மூலம்

தொகு