சுவாசிக்க முடியாதவருக்கு உயிர்காக்கும் ஒட்சிசன் ஊசிமருந்துகள்

திங்கள், சூலை 2, 2012

ஒக்சிசன் நிரப்பப்பட்ட நுண்துகள்களை உள்ளடக்கிய ஊசி மருந்து வகை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவில் பொசுடன் சிறுவர் மருத்துவமனை அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவசர காலத்தில் இந்த ஊசிமருந்து பலரது உயிர்களைக் காப்பாற்றும் எனக் கூறப்படுகிறது.


ஒட்சிசன் ஏற்றப்பட்ட மற்றும் நீங்கிய செவ்வணுக்கள் பற்றிய அசைபடம்

ஒட்சிசன், நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒரு வளிமம், சுவாசிப்பதன் மூலம் இதைப் பெற்றுக்கொள்கின்றோம். சுவாசத்தொகுதியில் ஏதேனும் பழுது ஏற்படும் நிலையில் சுவாசம் பாதிப்படைகின்றது. ஒட்சிசன் இல்லாத நிலையில் மூளை, இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கும், இதனால் இதய நிறுத்தம், மூளைச் சேதம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.


இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரிய மருத்துவமனைகளில் இதய-நுரையீரல் இயந்திரங்களின் உதவி கொண்டு குருதியில் ஒட்சிசன் சேர்க்கப்படுகின்றது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை; மருத்துவமனைக்கு அப்பால் தொலைவில் உள்ள ஒரு நபருக்கு உடனடியான ஒட்சிசன் சிகிச்சை கிடைப்பது சிக்கல். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு தற்காலிகமான தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்று எனும் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவியல் அறிஞர்களால் ஒட்சிசன் ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பொசுடன் சிறார் மருத்துவமனை ஆய்வாளர்களால் நுண்ணிய ஒட்சிசன் நிரப்பப்பட்ட நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒரு நபரின் நாளம் மூலம் குருதிக்குள் செலுத்தப்படக்கூடியவை, இதனால் அவரது குருதி விரைவில் ஒட்சிசனால் நிரம்பிக்கொள்ளும். ஒவ்வொரு முதலுதவி வல்லுனர்கள், மருத்துவர்களிடம் இத்தகைய ஒட்சிசன் நுண்துகள் ஊசி இருப்பதன்மூலம் உயிர்காப்பது இலகுவில் அமையும் என நம்பலாம்.


மருத்துவர் சோன் கேயிர் (Dr. John Kheir) மற்றும் அவரது சகாக்கள் பொசுடன் சிறார் மருத்துவமனை இதயவியல் துறைப்பிரிவில் இவ்வாராய்ச்சி நிகழ்வை நடாத்தினர்.


சுவாசக்குழாய் முற்றிலும் தடுக்கப்பட்டு சுவாசிக்காமல் உள்ள எலிக்கு கொழுப்பு உறையினால் சூழப்பட்டுள்ள ஒட்சிசன் நுண்துகள் நாளத்தினூடு குருதிக்குள் செலுத்தப்பட்டது. ஒட்சிசன் நுண்துகள் உதவியுடன் 15 நிமிடங்களுக்கு சுவாசிக்காமல் எலி இருப்பதை அவதானித்தனர். ஆய்வுகூடத்தில் ஒட்சிசன் இல்லாத நீலநிறமுடைய குருதி இத்துகள்கள் சேர்க்கப்பட்ட பின்னர் சிவப்பு நிறம் பெற்றதை கண்களால் கண்டோம் என சோன் கேயிர் தெரிவித்தார்.


ஒட்சிசன் நுண்துகள்களால் 15 – 30 நிமிடங்களுக்கே உதவமுடிகின்றது. இவை காபனீரொக்சைட்டைப் பரிமாறவில்லை, எனவே 30 நிமிடங்களுக்கும் மேற்பட்ட நேரத்தில் இவை செலுத்தப்படுவது குருதியில் காபனீரொக்சைட்டை மிகையாக்கும், ஆனால் இதனால் ஒரு நபர் இறப்பதில்லை. குறைவான ஒட்சிசனை ஈடு செய்து உயிரிழப்பைத் தடுப்பதே இச்சிகிச்சையின் நோக்கம். எடுத்துக்காட்டாக, நீரில் மூழ்கி சுவாசம் பாதிப்படைந்த ஒருவருக்கு மருத்துவமனை கொண்டு செல்லும் வரை ஒட்சிசன் வழங்குவது அவரது உயிரை மேலும் 30 நிமிடங்களுக்கு நீட்டிப்பதாக அமைகின்றது.


மூலம் தொகு