சிங்கப்பூர் பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சனவரி 5, 2012

சிங்கப்பூரில் சனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் படி சிங்கப்பூரில் அதன் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது. புதிய சம்பளத் திட்டத்தின்படி சிங்கப்பூர் சனாதிபதியின் சம்பளம் 51 சதவீதத்தினால் குறைக்கப்படும்.


கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்கள் குறைக்கப்படுகிறது. அந்தக் குழு பிரதமர் லீ சியன் லூங் அவர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. லீ செய்ன் லூங் கடந்த வருடத் தேர்தலில் சம்பள குறைப்புக்கு உறுதியளித்தார். இதன்படி அவரின் அடிப்படை சம்பளம் 36 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. இனி அவர் ஆண்டுச் சம்பளமாக 22 மில்லியன் சிங்கப்பூர் டொலர்களைப் பெறுவார்.


இருந்த போதிலும் அவர் தான் உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட தலைவர்களில் அதிக ஊதியம் பெரும் தலைவராக இருப்பார். அவரது சம்பளம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலானது. பராக் ஒபாமா ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டொலர்களே சம்பளமாகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிங்கப்பூர் அரசால் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் பிரதமரைப் போலவே 36 சதவீதம் குறையும். அவர்களின் ஆண்டுச் சம்பளம் இனி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களாக இருக்கும்.


சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக ஒரு பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகள் அதிகப்படியான இடங்களை வென்ற பிறகு அரசு கடும் அழுத்தத்துக்கு உள்ளான நிலையில், கடந்த மே மாதம் பிரதம் லீ இந்த சம்பள ஆய்வுக் குழுவை நியமித்தார். அந்தத் தேர்தலின் போது தீவு நாடான சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே, செல்வ நிலைகளில் உள்ள வித்தியாசம் வாக்காளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. அரசின் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், இது குறித்து இருவார காலம் விவாதங்கள் நடைபெறும் என்றும், பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.


மூலம்

தொகு