சிங்கப்பூரில் முதலாவது உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், சூலை 23, 2012

உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த முதலாவது உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சரும், சட்ட அமைச்சருமான கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நகர வளாகத்தின் டவுன் பிளாசா அரங்கத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த விழாவில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய மரபுடைமையைப் போற்றுவதன் அவசியத்தைப் பற்றிய தீவிரமான உரையாடலில் இறங்கினர். தேசிய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ த‌மிழ்ப் பேர‌வையின் 33ம் ஆண்டின் செய‌ற்குழுவின‌ர் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்த மாநாடு "த‌மிழ் இளைய‌ர் அடையாள‌ம்: ஒரு க‌ண்ணோட்ட‌ம்," என்ற‌ க‌ருப்பொருளில் நடைபெற்றது.


இந்த மாநாட்டில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து 13 மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை படைத்தனர். ஊடகங்களில் சிங்கப்பூர் தமிழ் இளையரின் சுய அடையாளம், தமிழ் திரைப்படங்களில் வட இந்திய நடிகைகளில் ஊடுருவல், பெண்களின் வெளிப்பாடு, முகநூலில் தமிழ் மொழியும் சாதியும், சங்க இலக்கியம் மூலம் தமிழ் இளையர் அடையாளத்தை வெளிக் காட்டுதல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண்களிடையே நவீன தமிழ் மொழி அடையாளம் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெற்றன. ஓரினப் புணர்ச்சி போன்ற பல மாறுபட்ட தலைப்புகளும் சமர்ப்பிக்கப்பட்டன.


மாநாட்டில் இக்கால இளையர்களுக்கு ஏற்றாற்போல் ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கப்பட்டதை இளையர்கள் வரவேற்றனர்.


தேசியப் பல்கலைக்கழகத்தில் இரவு விருந்துடனும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இமர்ஜென்ஸ் இசைக்குழுவின் இசைக்கச்சேரியுடனும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.


மூலம்

தொகு