சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ் அமெரிக்காவில் காலமானார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், அக்டோபர் 24, 2011

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அசீஸ் நேற்று முன்தினம் சனிக்கிழமை அமெரிக்காவில் காலமானார். இவர் சவூதி அரேபியாவின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தார். காலமாகும் போது இவரின் வயது 86. கடந்த 2009, ஆண்டு முதல் சுகவீனமுற்றிருந்த அவர் அமெரிக்காவிலும், மொராக்கோவிலும் சிகிச்சை பெற்று வந்தார். அவரது நோய் தொடர்பில் வெளியில் தெரிவிக்கப்படாத போதிலும் புற்றுநோயால் அவதியுற்றுவந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.


சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ்

இவர், மன்னர் அப்துல்லாவின் சகோதரர். அடுத்த மன்னராகும் வாய்ப்பில் இருந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து 78 வயதாகும் சவுதி உள்துறை அமைச்சரும் இவரது இளைய சகோதரருமான நயீப் பின் அப்துல் அசீஸ் மன்னர் அப்துல்லாவுக்குப் பின், மன்னராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.


கடந்த சூன் மாதம் முதல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சவுதி அரேபிய அரசவை அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரண்டு புனிதமான மசூதிகளின் தக்காரான அரசர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ், தமது சகோதரர் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அதிகாலை வெளிநாட்டில் இறந்தது குறித்து ஆளாத் துயர் அடைகிறார்' என்று அரசவையின் அதிகாரபூர்வ அறிவிப்பு கூறியிருந்தது.


இளவரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சவூதி தொலைக்காட்சிகளில் குரான் ஓதப்படும் காட்சி ஒளிபரப்பானது. இவரது உடல், சவூதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, 25ம் தேதி தலைநகர் ரியாதில் இறுதிச் சடங்கு நடைபெறுமென அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 87 வயதாகும் சவூதி அரசர் அப்துல்லா, ரியாதில் உள்ள மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


மூலம்

தொகு