கிர்கிஸ்தானில் மீண்டும் கலவரம், பலர் உயிரிழப்பு

வெள்ளி, சூன் 11, 2010


கிர்கிஸ்தானில் இரண்டாவது பெரிய நகரத்தில் கலவரம் வெடித்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கிர்கிஸ்தானில் ஓஷ் பிரதேசம்

நாட்டின் தெற்கில் உள்ள ஓஷ் நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இறங்கி சண்டையில் ஈடுபட்டனர். குறைந்தது 400 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ள அரசு அங்கு மேலதிக படையினரை அனுப்பியுள்ளது.


நாட்டில் கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து இடைக்கல அரசாங்கம் அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத் தடுமாறி வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் தெற்குப் பகுதியில் கிர்கீசிய இனத்தவருக்கும் சிறுபான்மை உஸ்பெக்கியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை நீடித்து வருகிறது.


ஓஷ் நகரத்தில் பெருமளவு உஸ்பெக் மக்கள் வசிக்கின்றனர். அத்துடன் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவின் செல்வாக்கு மிக்க பகுதியும் இதுவாகும்.


இரு வெவ்வேறு ஆயுதக்குழுக்களிடையே ஆரம்பித்த சண்டை துப்பாக்கிச் சூட்டுச் சண்டையாக மாறியதாக உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. நகரில் பல கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், உள்ளூர் தொலைக்காட்சி நிலையம், திரை மாளிகை ஆகியன சேதப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இங்குள்ள பெரும்பான்மையான நிறுவனக்கள் உஸ்பெக்குகளுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலையில் துப்பாக்கிச் சூடுகள் கேட்ட வண்ணம் உள்ளதென உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். எனினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளக அமைச்சு அறிவித்துள்ளது.


கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து பாக்கியெவ் தனது குடும்பத்துடன் அயலில் உள்ள பெலருஸ் நாட்டுக்குத் தப்பி ஓடினார். அப்போது இடம்பெற்ற வன்முறைகளில் 85 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபரில் பொதுத்தேர்தல்கள் இடம்பெறும் என இடைக்கால அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

மூலம் தொகு