கிர்கித்தானில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டார்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, திசம்பர் 19, 2010

கிர்கித்தானின் நாடாளுமன்றம் அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் என்பவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அவை முதல்வர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நடு ஆசியப் பகுதியில் முதலாவது நாடாளுமன்ற மக்களாட்சிக்கு அத்திவாரம் இடப்பட்டுள்ளது.


சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் உள்ளார். அவரது தலைமையில் அமைச்சரவை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 120 இருக்கைக கொண்ட நாடாளுமன்றத்தில் அத்தம்பாயெவிற்கு 92 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்தன. கடந்த அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. ஐந்து கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


ஏனைய மத்திய ஆசிய நாடுகளான துர்க்மெனிஸ்தான், கசக்ஸ்தான், தஜிக்கித்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகியவற்றில் சனாதிபதி ஆட்சியே உள்ளது.


புதிய கிர்கீசு அரசுக்கு ஐக்கிய அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சனாதிபதியை விட பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வருங்கால சனாதிபதி ஒரு ஆறு-ஆண்டு காலமே பதவியில் இருக்க முடியும். ஆனாலும் அவருக்கு பாதுகாப்பு அமைச்சர், மற்றும் தேசியப் பாதுகாப்பு சேவைகளின் தலைவர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த புரட்சிக்குத் தலைமை வகித்தவரும் தற்போதைய இடைக்காலத் தலைவராகவும் இருக்கும் திருமது ரோசா ஒட்டுன்பாயெவா 2011, டிசம்பர் 31 இல் பதவி விலகுவார்.


கிர்கித்தான் 5.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு இசுலாமிய நாடு ஆகும். நீண்ட காலமாக சனாதிபதியாக இருந்த அஸ்கார் அக்காயெவ் 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து நாட்டை விட்டு வெளியெறினார். இப்புரட்சியில் பங்கெடுத்த குர்மான்பெக் பக்கீயெவ் அடுத்து அதைபரானார். அவரும் பின்னர் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டு பெலருஸ் நாட்டுக்குத் தப்பி ஓடினார். இக்கலவரங்களில் 85 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

தொகு