கினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி

வியாழன், ஏப்பிரல் 1, 2010

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி-பிசாவு நாட்டில் இராணுவத்தினர் சிலர் இராணுவத் தளபதியைச் சிறைப்பிடித்து அங்கு “இராணுவப் புரட்சி” ஒன்றிற்கு இன்று முயன்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


பிரதமர் கார்லொசு கோமசு அடையாளம் தெரியாத ஓர் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி பிரதமரை விடுவிக்கும்படி சத்தமிட்டதைத் தொடர்ந்து பிரதமர் விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் தொடர்ந்து அவர் வீட்டுக்காவலில் உள்ளதாகவும் பின்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


புரட்சியாளர்களின் தலைவர் ஜெனரல் அந்தோனியோ இண்ட்ஜாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து போகாவிடின் பிரதமரைக் கொல்லப்போவதாக தெரிவித்தார். ஆனாலும் பின்னர் அவர் இன்றைய நிகழ்வுகள் இராணுவத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினை என்றும், இராணுவப் புரட்சி அல்ல என்றும் கூறினார்.


போர்த்துக்கலும் பிரான்சும் இந்நடவடிக்கையை ஒரு இராணுவப் புரட்சி என்றும் இதனை வன்மையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.


அரசுத்தலைவர் மாலம் பக்காய் சான்கா இதனை ஒரு இராணுவப் புரட்சி என்பதை ஏற்க மறுத்து விட்டார். அனைத்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


பிசாவுவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்துக்குள் டிசம்பர் 2009 இல் இருந்து தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் கடற்படைத் தளபதி ஒசே எமெரிக்கோ பூபோ நா சூட்டோ என்பவரை புரட்சி இராணுவத்தினர் விடுவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சி முயற்சிக்குத் தலைமை வகித்திருந்த இவர் காம்பியாவுக்குத் தப்பியோடியிருந்தார். ஓராண்டின் பின்னர் அவர் நாடு திரும்பி ஐநா கட்டடத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.


1974 ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன.


மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு சூன் மாதத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன.

மூலம் தொகு