கினி-பிசாவு: இராணுவம் ஆட்சியை இடைக்கால அரசிடம் கையளித்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், மே 23, 2012

ஆறு வாரங்களுக்கு முன்னர் கினி-பிசாவு நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் ஆட்சியை மீளக் கையளித்துள்ளதாக அறிவித்துள்ளது.


ஆனாலும், இடைக்கால அரசில் இராணுவப் புரட்சியை நடத்திய இராணுவத் தலைவர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால், அரசில் இராணுவத்தினர் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவார்கள் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிராந்திய அமைதிப் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய ஒன்றியமான எக்கோவாஸ் இந்த அமைதி உடன்பாட்டுக்கு முன்னின்று உழைத்தது. இந்த உடன்பாட்டின் படி ஓராண்டிற்குள் தேர்தல்கள் நடத்தப்படும், மற்றும் 600 மேற்காப்பிரிக்க நாட்டு அமைதிப் படையினர் நாட்டில் நிலை கொள்வர். புக்கினா பாசோ நாட்டின் 70 படையினர் அமைதிப் பணிக்காக சென்ற வாரம் கினி-பிசாவு வந்து சேர்ந்தனர்.


ரூயி டுவார்ட்டே பாரோசு என்பவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இரண்டு இராணுவத்தினரும் 27-உறுப்பினர் கொண்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இடைக்கால அரசின் தலைவராக மனுவேல் செரிபோ நாமட்சோ என்பவரை இராணுவப் புரட்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்த இராணுவப் புரட்சிக்கு முன்னர் இருந்த அமைச்சரவையில் இருந்த எவரும் புதிய அரசில் இடம்பெறவில்லை.


இராணுவப் புரட்சித் தலைவர்கள் 5 பேருக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பயணத்தடையை விதித்திருந்தது.


40 ஆண்டுகளாக விடுவிக்கப்பட்டிருக்கும் மேற்காப்பிரிக்க நாடான கினி-பிசாவுவில் எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவரும் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்கவில்லை. 1974 ஆம் ஆண்டில் போர்த்துக்கலிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா சுட்டுக் கொல்லப்பட்டார். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு போதைப்பொருள் கினி-பிசாவு ஊடாகவே கடத்தப்பட்டு வருகிறது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு