கினி-பிசாவு இராணுவம் மீது போராளிகள் தாக்குதல்
திங்கள், அக்டோபர் 22, 2012
- 22 அக்டோபர் 2012: கினி-பிசாவு இராணுவம் மீது போராளிகள் தாக்குதல்
- 23 மே 2012: கினி-பிசாவு: இராணுவம் ஆட்சியை இடைக்கால அரசிடம் கையளித்தது
- 13 ஏப்பிரல் 2012: கினி-பிசாவு நாட்டில் இராணுவப் புரட்சிக்கு இராணுவத்தினர் முயற்சி
- 10 சனவரி 2012: கினி-பிசாவு அரசுத்தலைவர் பாரிசில் காலமானார்
- 28 திசம்பர் 2011: கினி-பிசாவுவில் மீண்டும் இராணுவப் புரட்சி, கடற்படைத் தளபதி கைது
மேற்காப்பிரிக்க நாடான கினி-பிசாவுவில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று அதிகாலை தலைநகர் பிசாவுவுக்கு வெளியே இடம்பெற்ற தாக்குதலை முறியடித்த இராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் ஆறு போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற புரட்சி ஒன்றை அடுத்து இராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இதனால் நேற்றைய சம்பவம் அங்கு மேலும் முறுகல் நிலையைத் தோற்றுவித்திருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது நிலவிவரும் உறுதியின்மை அதனைப் போதைப்பொருள் கடத்தும் முக்கிய இடமாக மாற்றியுள்ளது. இலத்தீன் அமெரிக்காவில் இருந்து கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள் கினி-பிசாவு ஊடாக ஐரோப்பாவுக்குக் கடத்தப்படுகின்றன. இராணுவத்தினரின் உயர் அதிகாரிகள் சிலரும் இக்கடத்தலில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அங்கு அரசியலமைப்பு ஆட்சியை ஏற்படுத்துமாறு அந்நாட்டின் ஆட்சியாளரை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை அண்மையில் கோரியிருந்தது.
1974 ஆம் ஆண்டில் போர்த்துகலிடம் இருந்து விடுதலை அடைந்தது முதல் அங்கு அடிக்கடி இராணுவப் புரட்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு தலைவரும் இங்கு தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஆட்சி நடத்தவில்லை.
மூலம்
தொகு- Six killed in Guinea-Bissau gunbattle - sources, பிபிசி, அக்டோபர் 21, 2012
- Seven dead in attack on Guinea-Bissau army barracks, டெய்ல்லி டைம்சு, அக்டோபர் 22, 2012