கடத்தப்பட்ட ஒரிசா சட்டமன்ற உறுப்பினரை இந்திய மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், ஏப்பிரல் 26, 2012

ஒரு மாதத்திற்கு முன்னர் தங்களால் கடத்தப்பட்ட ஒரிசா மாநில சட்டமன்ற உறுப்பினரை மாவோயிஸ்டுகள் இன்று விடுவித்தனர்.


ஒரிசாவின் நாராயன்பட்னா காட்டுப்பகுதியில் பாலிபெட்டா கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜீனா இக்காக்கா என்பவரை வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் என்பவரிடம் மாவோயிஸ்டுகள் கையளித்தனர். "நான் நலமே உள்ளேன். அவர்கள் என்னை எவ்விதத்திலும் துன்புறுத்தவில்லை,"என ஜீனா இக்காக்கா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பொதுக்கூட்டம் ஒன்றில் பங்குபற்றி விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் கடந்த மார்ச் 24 ஆம் நாள் இவர் கடத்தப்பட்டார். இருபதுக்கும் அதிகமான மாவோயிஸ்டுகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் அரசு சிறையில் இருந்து விடுவிக்க ஒப்புக்கொண்ட பின்னரே இவர் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரு. இக்காக்கா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தம்மிடம் உறுதியளித்துள்ளார் எனவும் அதன் பின்னரே இவரை விடுவிக்கத் தமது மேலிடம் கட்டளை பிறப்பித்ததாகவும் போராளிகளின் பேச்சாளர் ஒருவர் நேற்று விடுத்த வாய்மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இக்காக்கா கடத்தப்படுவதற்கு முன்னர் இரண்டு இத்தாலியச் சுற்றுலாப் பயணிகள் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு ஒருவர் மார்ச் 25 இலும், மற்றவர் ஏப்ரல் 12 ஆம் நாளும் விடுவிக்கப்பட்டனர்.


இதற்கிடையில் அயல் மாநிலமான சத்தீசுக்கரில் சென்ற வாரம் ஏப்ரல் 21 அன்று கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்சு பால் மேனன் என்பவர் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை.


மூலம்

தொகு